ADDED : ஏப் 10, 2024 09:30 PM

புதுடில்லி:டில்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகக் கோரி, தீன் தயாள் சாலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் முன் நேற்று, பா.ஜ., முற்றுகைப் போராட்டம் நடத்தியது. தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் கூட்டத்தை கலைத்தபோது, டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா காயம் அடைந்தார்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலக வேண்டும் என பா.ஜ., கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், தீன் தயாள் சாலையில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் முன், டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் பா.ஜ.,வினர் திரண்டனர்.
முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகக் கோரி கோஷமிட்டனர். போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, வீரேந்திர சச்தேவா காயம் அடைந்தார்.
அவரை மீட்ட போலீசார், ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, “அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சிறை நெறிமுறைகள் அனுமதிக்காததால், சிறையில் இருந்து அரசு நடத்த முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவோம்,”என்றார்.
சாலைகள் மூடல்
பா.ஜ., போராட்டம் காரணமாக தீன் தயாள் சாலை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற சாலைகளிலும் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஐ.டி.ஓ., சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்திர பிரஸ்தா சாலை, விகாஸ் சாலை, மின்டோ சாலை, பகதூர் ஷா ஜாபர் சாலைகளில் நேற்று காலை 11:00 மணி மதியம் 2:00 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
பயணியர் மாற்று வழிகளில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

