புதிய வழித்தடங்களில் இயக்க டீசல் பஸ் வாங்கும் பி.எம்.டி.சி.,
புதிய வழித்தடங்களில் இயக்க டீசல் பஸ் வாங்கும் பி.எம்.டி.சி.,
ADDED : செப் 12, 2024 05:46 AM

பெங்களூரு: புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க, பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் இறுதிக்குள் டீசல் பஸ்கள் வாங்கப்படும்.
இதுகுறித்து, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
அசோக் லேலண்ட் நிறுவனத்திடம், டீசல் பஸ்சின் மாதிரியை பி.எம்.டி.சி., பெற்றுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக பெங்களூரின் ரோட்டில் சோதனை முறையில் ஓட்டி, தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திருப்திகரமாக இருந்ததால், 821 பஸ்களை வாங்குவது குறித்து, நிறுவனத்துடன் பி.எம்.டி.சி., ஒப்பந்தம் செய்து கொண்டது. இவற்றில் 50 பஸ்கள், செப்டம்பர் இறுதியில் வருகின்றன. மற்ற பஸ்கள் 2025ல் வரும். இந்த பஸ்கள் பெங்களூரின் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.
'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பி.எம்.டி.சி., பஸ் போக்குவரத்தை விஸ்தரிக்கும்படி கோரிக்கை வலுத்துள்ளது. பயணியர் எண்ணிக்கையும் 27 லட்சத்தில் இருந்து, 40 லட்சமாக அதிகரித்தது. பி.எம்.டி.சி.,யில் 2,000 பஸ்கள் பழையதாகிவிட்டன. இவற்றை காயலான் கடைக்கு அனுப்ப வேண்டியுள்ளது.
புதிய பஸ்கள் வாங்குவதுடன், ஒப்பந்த அடிப்படையில், 2,211 பஸ்கள் பெறப்படும். இவற்றில் 920 குளிர்சாதன வசதி இல்லாதது; 320 குளிர்ச்சாதன வசதி உள்ள எலக்ட்ரிக் பஸ்கள், 620 டீசல் பஸ்களாகும்.
தற்போது 630 குளிர்சாதன பஸ்கள் இயங்குகின்றன. வரும் நவம்பரில் 290 குளிர்சாதன வசதி இல்லாத எலக்ட்ரிக் பஸ்கள் வரவுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமான டி.எம்.எல்., ஸ்மார்ட் சிட்டி மொபிலிட்டி சொல்யூஷன்சின் தார்வாட் பிரிவில், இந்த பஸ்கள் தயாராகின்றன.
புதிய வழித்தடங்களில் பஸ்கள் அறிமுகம் செய்யப்படும். எனவே 2,500 நடத்துனர்களை நியமிக்க, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. இந்த பஸ்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களே டிரைவர்களை நியமிப்பதால், பி.எம்.டி.சி., சார்பில் டிரைவர்கள் நியமிக்கப்படுவதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.