எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களுக்கு வாரிய பதவி; விளக்கம் கேட்டு அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களுக்கு வாரிய பதவி; விளக்கம் கேட்டு அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : பிப் 22, 2025 04:06 AM

பெங்களூரு : எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்துள்ள வாரியம், கார்ப்பரேஷன் தலைவர் பதவி வழங்கியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் சூரிபாலையா. இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனு:
42 பேர்
கர்நாடக சட்டசபையில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 15 சதவீதம் அதாவது, 34 எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும். தற்போது முதல்வர் உட்பட 33 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
அதுபோன்று, கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள வாரியம், கார்ப்பரேஷன்களுக்கு 42 எம்.எல்.ஏ., க்கள், எம்.எல்.சி.,க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., பதவிக்கும்; வாரியம், கார்ப்பரேஷன் தலைவர் பதவிக்கும் ஊதியம் என இரட்டை ஆதாயம் பெறுகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது.
அவர்களுக்கு இப்பதவி வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்றாலும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொடுப்பது தவறு. இது 191வது சட்டப்பிரிவை மீறுவதாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அருண் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சாய் தீபக் வாதிடுகையில், ''வாரியம், ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, அமைச்சர்களுக்கு ஈடான கேபினட் அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
''அரசியலமைப்பின் பிரிவு 164 (1) (ஏ)ன் படி, அமைச்சரவை குழுவில், முதல்வர் உட்பட 15 சதவீதம் பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்க வேண்டும். ஆனாலும், ஒரு அறிவிப்பை வெளியிட்டு, கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து, கேபினட் அந்தஸ்து வழங்குவது சரியல்ல,'' என்றார்.
விரக்தி
அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் உமாபதி வாதிடுகையில், ''மனுதாரர், கர்நாடக மாநில சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். தனக்கு பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தால், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஜனநாயகம் மற்றும் சட்டப்படி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். அதை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய இயலாது. இதை நிவர்த்தி செய்ய, அவர் தரப்பு வாதங்களை கேட்டுதான் ஆக வேண்டும். இம்மனு தொடர்பாக 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மார்ச் 27 ம் தேதி இம்மனு மீது விசாரணை நடக்கும்' என்றனர்.

