சுரங்கத்திலிருந்து 17 நாட்களுக்கு பின் மோப்ப நாய் உதவியுடன் சடலம் மீட்பு
சுரங்கத்திலிருந்து 17 நாட்களுக்கு பின் மோப்ப நாய் உதவியுடன் சடலம் மீட்பு
ADDED : மார் 10, 2025 04:20 AM

நாகர்கர்னுால்: ஸ்ரீசைலம் அணை சுரங்க விபத்தில் சிக்கிய எட்டு பேரில் ஒருவரின் உடல், 17 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்டது.
தெலுங்கானாவின் நாகர்கர்னுால் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் அணை அருகே, 14 கி.மீ., நீள சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணி நடந்தபோது, கடந்த பிப்., 22ல் சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், இரண்டு இன்ஜினியர்கள் உட்பட எட்டு பேர் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில் எலி வளை சுரங்க நிபுணர்கள், பேரிடர் மீட்பு படை உட்பட பல்வேறு துறைகளின் 700 பேர் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த வாரம், 4 கோடி ரூபாய் ஒதுக்கி, ரோபாட்டிக் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், 25 அடி உயரத்துக்கு சகதி சேர்ந்ததாலும், அதற்குள், சுரங்கம் துளையிடும் கருவிகள் உடைந்த நிலையில் சிக்கியதாலும் எட்டு பேரை மீட்க முடியவில்லை.
அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்ற நிலையில், கேரள போலீஸ் பிரிவில் உள்ள, 'கேடவர் நாய்கள்' எனப்படும் பெல்ஜியத்தை சேர்ந்த 'மாலினாய்ஸ்' இன மோப்ப நாய்கள் அழைத்து வரப்பட்டன. 15 அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் மனித உடல்கள் பல ஆண்டுகளானாலும் கூட, மோப்ப சக்தியில் கண்டுபிடிக்கும் திறன் படைத்தவை, இந்த நாய்கள்.
இவற்றின் வாயிலாக, ஒருவரது உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தெலுங்கானா நீர்வளத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது:
சுரங்கத்தினுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கடுமையான துர்நாற்றத்தை, 'கேடவர் நாய்கள்' கண்டறிந்து தெரிவித்தன. அந்த இடத்தை தோண்டியபோது, ஒரு கை தெரிந்தது.
மேலும், உடைந்து போன சுரங்கக் கருவிக்குள் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. கருவியை உடைத்து, உடல் மீட்கப்படும். மேலும், மூன்று பேர் புதைந்து இருக்கும் இடத்தையும் மோப்ப சக்தியால் நாய்கள் கண்டறிந்துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.