போலீஸ் வேலையில் 'பாடி பில்டர்'கள் உடற்தகுதி தேர்வில் சொதப்பல் உடற்தகுதி தேர்வில் சொதப்பல்
போலீஸ் வேலையில் 'பாடி பில்டர்'கள் உடற்தகுதி தேர்வில் சொதப்பல் உடற்தகுதி தேர்வில் சொதப்பல்
ADDED : பிப் 26, 2025 02:18 AM
திருவனந்தபுரம்,கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு போலீஸ் வேலைக்கான ஆள் தேர்வில், விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு உள்ளது. அதன்படி, ஒலிம்பிக் மற்றும் தேசிய விளையாட்டு வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர்.
இந்நிலையில், இந்த பிரிவில் சிறப்பு ஒதுக்கீடாக, 'பாடி பில்டிங்' போட்டிகளில் சர்வதேச அளவில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கும் போலீஸ் வேலை அளிக்க, அரசு முடிவு செய்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், இந்த முடிவில், அரசு உறுதியாக இருந்தது.
இதை தொடர்ந்து, கண்ணுாரை சேர்ந்த பாடி பில்டர் ஷினு சோவ்வா மற்றும் கொச்சியை சேர்ந்த சித்தரேஷ் நடேசன் ஆகியோருக்கு ஆயுதப்படையில் எஸ்.ஐ., பணிக்கான நியமன உத்தரவை கேரள அரசு சமீபத்தில் வழங்கியது.
உத்தரவு வழங்கப்பட்ட பின், இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஷினு சோவ்வா, தோல்வி அடைந்தார். 100 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தேர்வுகளில் அவர் தோல்வி அடைந்தார்.
மற்றொரு பாடி பில்டரான சித்தரேஷ், உடற்தகுதி தேர்விலேயே பங்கேற்கவில்லை.
நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டு பிரிவு இடஒதுக்கீட்டில் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்கையில், உடற்தகுதி பெற முடியாத நபர்களை பணி நியமனம் செய்த அரசின் முடிவு, கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.