ADDED : மார் 11, 2025 03:48 AM

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.ஐ., 119 என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. இதில், 322 பயணியரும், 19 ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், கழிப்பறைக்கு சென்ற நபர் ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த மிரட்டல் கடிதத்தை விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் கொடுத்தார்.
அதில், 'விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என்ற குறிப்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், விமானியிடம் தெரிவித்தனர்.
உடனே, மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை 10:25 மணிக்கு, மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
உடனடியாக பயணியர் அனைவரும் இறக்கிவிடப்பட்டு விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், சந்தேகத்துக்கிடமாக எந்த பொருட்களும் கிடைக்காததை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.