ADDED : ஜூன் 02, 2024 01:44 AM
மும்பை, சென்னையில் இருந்து மும்பைக்கு, 172 பயணியருடன் புறப்பட்டு சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு நேற்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. 172 பயணியருடன் சென்ற இந்த விமானம் நடுவானில் சென்றபோது விமான பைலட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மேலும் விமானத்தை மும்பையில் இறக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பைலட், மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து மும்பையில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காலை 8:45 மணிக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டது.
ஏணியை பயன்படுத்தி பயணியர் அவசரமாக தரையிறங்கினர். தொடர்ந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை இண்டிகோ நிறுவனம் உறுதி செய்துஉள்ளது.
இது குறித்து அந்த விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மும்பையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானத்துக்கு ஒரே வாரத்தில் வந்த இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் இது. முன்னதாக, மே 28ல் டில்லியில் இருந்து வாரணாசி சென்ற இந்த நிறுவனத்தின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.