ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சம்பளம் தராததால் ஊழியர் ஆத்திரம்
ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சம்பளம் தராததால் ஊழியர் ஆத்திரம்
ADDED : மார் 28, 2024 10:44 PM
மஹாதேவபுரா : சம்பளம் தராததால் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு மஹாதேவபுராவில் பிரபல 'பாஸ்டா ஸ்டீரிட்' ஹோட்டல் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த ஹோட்டலின், வரவேற்பு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில், 'ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடித்துவிடும்' என கூறிவிட்டு, மர்மநபர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, வாடிக்கையாளர்கள் சிலரை அவசர, அவசரமாக வெளியேற்றினர். மஹாதேவபுரா போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வந்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்தது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், மர்மநபர் விடுத்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
ஹோட்டலுக்கு வந்த அழைப்பு குறித்து விசாரித்தபோது, இந்திராநகரில் இயங்கி வரும், 'பாஸ்டா ஸ்டீரிட்' ஹோட்டல் ஊழியர் வேலு, 37, என்பவர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பளம் தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை, விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

