ADDED : மே 01, 2024 01:38 AM
புதுடில்லி:சாச்சா நேரு மருத்துவமனைக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸ் படையினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.
டில்லி ஷாஹ்தாராவில் அமைந்துள்ளது சாச்சா நேரு மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு நேற்று காலை 10:00 மணிக்கு வந்த இ-மெயிலில், மருத்துவமனைக்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறிதல் குழு, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழு, தீயணைப்புப் படையினர் மற்றும் டில்லி மாநகரப் போலீசார் விரைந்து வந்தனர்.
மருத்துவமனை முழுதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்த இ-மெயிலை அனுப்பியவர் ஒரே நேரத்தில் பல நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அனுப்ப முயன்றுள்ளார். அதில் சில தவறான முகவரி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டில்லி மாநகரப் போலீஸ் சிறப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.