டில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
டில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
ADDED : மார் 02, 2025 05:26 AM

டில்லியில் உள்ள அரசு விருந்தினர் இல்லமான தமிழ்நாடு இல்லத்துக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
உடனடியாக மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய பின்னரே, அது புரளி என தெரியவந்தது.
புதிய இல்லம்
டில்லியில் தமிழக அரசின் முகமாக தமிழ்நாடு இல்லம் விளங்குகிறது. சாணக்யபுரியின் கவுடில்யா சாலையில் இருப்பது பழைய இல்லம். சாணக்யா மால் அருகே இருப்பது புதிய இல்லம்.
புதிதாக கட்டுவதற்காக, பழைய இல்லம் இடிக்கப்பட்டுவிட்டதால் அங்கு எந்த அலுவல்களுக்கும் இடமில்லை.
அதே சமயம், பொதிகை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய இல்லத்தில் தான், தற்போது அனைத்து அலுவல்களும் நடக்கின்றன. இங்கு, மொத்தம் நான்கு தளங்கள் மற்றும் 65 அறைகள் உள்ளன. தவிர, இங்கு ஆடிட்டோரியம், ஹோட்டல்கள் உள்ளன.
இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, நேற்று காலை 11:00 மணிக்கு, டில்லி துணை கமிஷனர் அலுவலகத்திற்கு இ - மெயில் வரவே, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை என்பதால், முக்கிய அலுவலர்கள் பலரும் விடுப்பில் இருந்தனர்.
தகவல் கேள்விப்பட்டு அனைத்து அலுவலர்களும் அங்கு குவிந்தனர்.
தீவிர சோதனை
ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த டில்லி போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என நுாற்றுக்கணக்கானோர் குவிந்ததும், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
முதல் வேலையாக, இல்லத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், தங்கியிருந்த விருந்தினர்கள் என அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
விருந்தினர்களாக தங்கியிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் வெளியேற்றப்பட்டதும், மோப்ப நாய்கள் உதவியுடன், உள்ளே சென்று ஒவ்வொரு இடத்திலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி மட்டுமே என தெரியவந்தது.
இருப்பினும், தமிழ்நாடு இல்ல ஊழியர்கள் ஒவ்வொருவரையும் போலீசார் தனித்தனியே சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர்.
சமீபகாலமாக, டில்லியில் விமானங்கள், பள்ளிகள், பூங்கா போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளிகள் தொடர்ந்து வருகின்றன. டில்லியில் உள்ள முக்கியமான பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.