ADDED : மே 13, 2024 06:30 AM
பெங்களூரு: பெங்களூரின் ஆறு மருத்துவமனைகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சமீப நாட்களாக, ஆங்காங்கே வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. பெங்களூரு, மங்களூரு விமான நிலையங்கள், பெங்களூரின் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை போலீசார், அலட்சியப்படுத்தாமல் அங்கு சென்று சோதனை நடத்துகின்றனர். பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் கோவிந்தராஜபுரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, நாகவாராவில் உள்ள செயின்ட் பிலோமினா மருத்துவமனையில், வெடிகுண்டு வைத்துள்ளதாக பெங்களூரு போலீசாரின் இ - மெயிலுக்கு, நேற்று மதியம் தகவல் வந்தது.
பிலோமினா மருத்துவமனை மட்டுமின்றி, நாராயணா ஹெல்த் கேர், சாகர் மருத்துவமனை, சமர்த்தா, ஜி.எம்.ஜி., மருத்துவமனை, விமலாலய்யா மருத்துவமனைக்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக, இ - மெயிலில் கூறப்பட்டிருந்தது.
போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன், ஆறு மருத்துவமனைகளுக்கும் சென்று, அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இது பொய்யான மிரட்டல் என்பதை, போலீசார் உறுதிப்படுத்தினர்.