ADDED : மே 24, 2024 05:35 AM
பெங்களூரு: பெங்களூரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் சமீப நாட்களாக பிரபலமான பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. போலீசாரும் அங்கு சென்று சோதனை நடத்துகின்றனர். முடிவில், அது வதந்தி என்பது உறுதியாகிறது.
இந்நிலையில், பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஓடேரா ஹோட்டல் உட்பட மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு, நேற்று அதிகாலை இ - மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சென்று மூன்று ஹோட்டல்களிலும் சோதனை நடத்தினர். ஒரு இடம் கூட விடாமல் தேடினர்; எங்கும் வெடிகுண்டு இல்லை. இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டலால் ஹோட்டல்கள் முன் பதற்றமான சூழ்நிலை உருவானது.
ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் மற்றும் ஊழியர்கள் பேசி, பதற்றத்தை தணித்தனர். முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.