ADDED : மே 16, 2024 10:32 PM
பெங்களூரு:
நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் துவங்கிய உடன் முன்பே, மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு இலவசமாக சீருடை, புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கைந்து மாதங்களுக்கு பின், சீருடை, புத்தகங்கள் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இம்முறை குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காமல், கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டில் பெரும்பான்மையான பள்ளிகளுக்கு தேவையான சீருடை, பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டு விட்டன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும். விரைவில் மற்ற பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்.
இதற்கு முன் எட்டாவது, ஒன்பதாம் வகுப்பு மாணவியருக்கு மட்டும் சுடிதார் சீருடை வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இருந்து ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவியருக்கும் சுடிதார் வழங்கப்படும். சில பள்ளிகளுக்கு ஏற்கனவே சீருடை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***

