ADDED : ஆக 23, 2024 06:10 AM
பெங்களூரு: ''பி.ஓ.பி., சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து யாரும் பி.ஓ.பி., சிலைகள் வைக்க வேண்டாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மண் சிலைகள் மட்டுமே வைத்து வழிபடவும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.
அப்போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரீசால் செய்யப்பட்ட சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தாண்டு, செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதன்பின், ஒரு மாதம் வரை கர்நாடகாவின் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவர். எனவே இந்தாண்டும் பி.ஓ.பி., சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், நேற்று கூறியதாவது:
விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பதற்கு, வெவ்வேறு துறைகளின் அனுமதி பெறுவது கட்டாயம்.
இதற்காக வெவ்வேறு துறை அலுவலகங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்ப்பதற்காக, மாநகராட்சி, பெஸ்காம், போலீஸ், தீயணைப்பு என அனைத்து துறை அனுமதியை ஒரே இடத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பெங்களூரு மாநகராட்சி துணை மண்டலங்களில் 63 மையங்கள் திறக்கப்படும். ஏரிகளில் சிலைகள் கரைப்பதற்கு தனி ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவர்.
பி.ஓ.பி., சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து யாரும் பி.ஓ.பி., சிலைகள் வைக்க வேண்டாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மண் சிலைகள் மட்டுமே வைத்து வழிபடவும்.
ஹலசூரு உட்பட வெவ்வேறு ஏரிகளில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலைகள் கரைப்பதற்கு நடமாடும் டேங்கர் வாகன வசதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.