சம்பளம் கேட்ட தொழிலாளியை அடித்துக் கொன்ற முதலாளி கைது
சம்பளம் கேட்ட தொழிலாளியை அடித்துக் கொன்ற முதலாளி கைது
ADDED : ஆக 20, 2024 08:40 PM
பரிதாபாத்:சம்பள நிலுவையைக் கேட்ட தொழிலாளியை அடித்துக் கொன்ற முதலாளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
பீஹார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெச்சன் ஷா,35. புதுடில்லி அருகே பரிதாபாத்தில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஆலையில் வேலை செய்தார். இவருக்கு மாதம் 12,000 ரூபாய் சம்பளம். ஆனால், 65,000 ரூபாய் சம்பள பாக்கி இருந்தது. சில மாதங்களுக்கு முன், 29,000 ரூபாயை வழங்கியுள்ளனர். மீதியை அடுத்து ஊருக்குச் செல்லும் போது தருவதாக கூறியுள்ளனர்.
ரக்ஷா பந்தனுக்கு ஊருக்கு செல்வதற்கு முன் சம்பள பாக்கியை கொடுக்குமாறு ஆலை முதலாளிகள் ரமேஷ் திவாரி மற்றும் கியானியிடம் கூறியிருந்தார்.
நேற்று முன் தினம் மாலை ஊருக்குச் செல்ல திட்டமிட்ட பெச்சன் ஷா, சம்பள பாக்கியை வாங்க ஆலைக்குச் சென்றார். அப்போது ரமேஷ் திவாரி மற்றும் அவரது மைத்துனர் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
ரக்ஷாபந்தன் கொண்டாட ஊருக்குப் புறப்பட்டு விட்டதால் சம்பள பாக்கியை தருமாறு பெச்சன் ஷா கேட்டுள்ளார். ஆனால், திவாரியும் ராஜேஷும் சேர்ந்து ஷாவை சரமாரியாக தாக்கினர்.
சக தொழிலாளர்கள் ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், பெச்சன் ஷா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து, சக தொழிலாளர் மதன் என்பவர், பரிதாபாத் 7வது செக்டார் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், ரமேஷ் திவாரி மற்றும் அவரது மைத்துனர் ராஜேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பெச்சன் ஷ உடல், உடற்கூறாய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

