3 மாவட்டங்களில் திடீர் மழை மின்னல் தாக்கி சிறுவன் பலி
3 மாவட்டங்களில் திடீர் மழை மின்னல் தாக்கி சிறுவன் பலி
ADDED : ஏப் 12, 2024 05:31 AM

பெங்களூரு: கடும் வெயிலுக்கு இடையில், கலபுரகி, விஜயபுரா, சிக்கமகளூரில் நேற்று திடீரென பலத்த மழை பெய்து, மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. விஜயபுராவில் மின்னல் தாக்கி, 16 வயது சிறுவன் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் இந்தாண்டு வெயில் வாட்டி வதைக்கிறது. காலை 7:00 மணி முதலே வெயிலின் தாக்கத்தை உணர முடிகிறது. குழந்தைகள், பெண்கள், முதியோர் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையில், கொப்பாலில் நேற்று முன்தினம் திடீரென பலத்த மழை பெய்தது. சில பகுதிகளில், குடியிருப்பு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இது போன்று, விஜயபுரா, கலபுரகி, சிக்கபல்லாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று திடீர் என மழை பெய்தது. ஆண்டுதோறும் மாநிலத்திலேயே அதிகபட்ச வெப்பம் பதிவாகும் கலபுரகியில் நேற்று மதியத்துக்கு பின், பலத்த மழை பெய்து, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அப்சல்பூர் தாலுகாவின் பல பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மலை பிரதேசமான சிக்கமகளூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின், பைகூர், ஹங்கரவள்ளி, ஆவுதி உட்பட பல கிராமங்களில் மழை பெய்து, குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயபுரா மாவட்டத்திலும் எதிர்பாராத மழை பெய்தது. திக்கோட்டா கிராமத்தில், பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விளை நிலத்தில் இருந்த நிங்கப்பா அவராதி, 16, என்ற சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கும்படி கிராமத்தினர் வலியுறுத்தினர்.
மொத்தத்தில் ஓராண்டுக்கு பின் பெய்த மழையால் மக்கள் குஷியடைந்தனர். தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், 'கடலோர மாவட்டங்களை தவிர, மாநிலத்தின் மத்திய பகுதிகளில் இன்று மழை பெய்யும்' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

