டிரைவருக்கு மிரட்டல் விடுத்த சிறுவனின் தாத்தா கைது புனே கார் விபத்து:
டிரைவருக்கு மிரட்டல் விடுத்த சிறுவனின் தாத்தா கைது புனே கார் விபத்து:
ADDED : மே 25, 2024 11:58 PM
புனே, மஹாராஷ்டிராவில் குடிபோதையில் சொகுசு கார் ஓட்டிச்சென்று, இருவர் உயிரிழக்க காரணமான சிறுவனின் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், டிரைவரை கட்டாயப்படுத்தி குற்றவாளியாக்க முயற்சித்த குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் சமீபத்தில் சொகுசு கார் மோதி ஐ.டி., ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
வழக்கு பதிவு
விசாரணையில், காரை ஓட்டியது ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வாலின், 17 வயது மகன் வேதாந்த் என்பதும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது. அவருடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், மைனர் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் அச்சிறுவனை ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறுவனுக்கு ஜாமின் வழங்கினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கடந்த 21ம் தேதி, விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மற்றும் சிறுவர்களுக்கு மது வழங்கிய இரண்டு மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக விபத்து நிகழ்ந்தபோது, அந்த காரை, அச்சிறுவன் இயக்கவில்லை எனவும், அவர்களின் குடும்ப டிரைவர் இயக்கியதாக நம்பவைக்கும் முயற்சிகள் அரங்கேறின.
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, சிறுவனின் தாத்தா, டிரைவரை கடத்தி வைத்து, இந்த பழியை அவர் மீது போட திட்டமிட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக டிரைவரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா மீது போலீசில் புகார் அளித்தார்.
விசாரணை
இப்புகாரில், 'விபத்தின்போது அச்சிறுவனை காப்பாற்றும் நோக்கில், காரை நான் இயக்கியதாக போலீசிடம் வாக்கு மூலம் அளிக்குமாறு என்னை மிரட்டினர். என் மொபைல் போனையும் பறித்து வைத்தனர்.
'இரண்டு நாட்களாக, என்னை அவர்களின் பங்களாவில் அடைத்து வைத்த நிலையில், என் மனைவி தான் காப்பாற்றினார்' என, குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து அச்சிறுவனின் தாத்தாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.