மூளை இல்லாத நகர வளர்ச்சி அமைச்சர் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்
மூளை இல்லாத நகர வளர்ச்சி அமைச்சர் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் பாய்ச்சல்
ADDED : ஜூலை 06, 2024 05:53 AM

மைசூரு: தன் மீது குற்றம்சாட்டிய நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷை, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத், வாய்க்கு வந்தபடி வசைபாடினார்.
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், வீட்டுமனை வழங்கியதில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயரிலும் வீட்டுமனை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில், பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
நெருக்கடி
இதற்கு பொறுப்பேற்று, ராஜினாமா செய்யும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றன.
இந்நிலையில் பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத்தும், மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் ஏழு வீட்டுமனைகளை கேட்டதாக, நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் குற்றம் சாட்டி இருந்தார். இதனால் கொதிப்படைந்த விஸ்வநாத், அமைச்சரை வாய்க்கு வந்தபடி ஒருமையில் வசைபாடினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'ரியல் எஸ்டேட் கிராக்கி'யான பைரதி சுரேஷ், சமீபத்தில் ஹெலிகாப்டரில் வந்து போலீஸ் பாதுகாப்புடன், ஆலோசனை நடத்தி உள்ளார். வீட்டுமனைகள் வழங்கப்பட்டதை ரத்து செய்ததாக கூறினார். ஆனால், அதிகாரபூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
பைரதி சுரேஷுக்கு மூளை உள்ளதா. அவர் புத்திசாலியா, முட்டாளா தெரியவில்லை. இதற்கு முன் நானும் கூட, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தேன். ஆனால் ஒரு வீட்டுமனை கூட, என் பெயரில் பெறவில்லை. நான் நேர்மையானவன் என, அம்பேத்கர் மீது சத்தியம் செய்கிறேன்.
மறுப்பு
பங்காரப்பா முதல்வராக இருந்த போது, எனக்கு வீட்டுமனை வழங்கும்படி, அன்றைய அமைச்சர் கோவிந்தராஜுவிடம் கூறினார். ஆனால் எனக்கு எதுவும் வேண்டாம் என, கூறிவிட்டேன். தற்போதைய முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது, என் வலியுறுத்தலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.