ADDED : மே 11, 2024 09:46 PM

தங்களின் சுகமே பெரிது என, சுய நலத்துடன் வாழும் மக்களுக்கு இடையே, சேவை மனப்பான்மையுடன் தொண்டு செய்யும் சங்கங்கள், அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றில் 'ரோட்டி அறக்கட்டளை' முன்னுதாரணமாக விளங்குகிறது.
பெங்களூரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளன. சில அமைப்புகள் இலைமறைக்காயாக பணியாற்றுகின்றன; வெளிச்சத்துக்கு வருவதில்லை. அவற்றில் ரோட்டி அறக்கட்டளையும் ஒன்று. இதன் நிறுவனர் சையத் குலாப், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களின் பசியை போக்குகிறார்.
காத்திருப்பு
பெங்களூரின், சித்தாபுரா போலீஸ் நிலையம் முன்பும், ராஜிவ்காந்தி மருத்துவமனை கேட் அருகிலும், தினமும் மதியம் 12:00 மணிக்கு, நுாற்றுக்கணக்கான மக்கள் காத்திருப்பதை காணலாம். இவர்களுக்கு சையத் குலாப் உணவு வழங்கி, பசியை போக்குகிறார்.
ஜெயநகரின் திலக் நகரில் வசிக்கும் சையத் குலாப், ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் 2016 மார்ச் முதல், ஏழை மக்களின் பசியை தீர்க்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு உணவு வழங்குகிறார்.
இவரது நண்பரின் மகள், உடல் நலம் பாதிப்படைந்து இந்திரா காந்தி மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். இவரை பார்ப்பதற்காக சையத் குலாப் சென்றிருந்தார். அப்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள், உணவுக்காக பரிதவிப்பதை நேரில் பார்த்தார்.
ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவமனை உணவகமும் மூடப்பட்டிருக்கும். இதனால் நோயாளிகளின் உறவினர்கள், ஹோட்டல் எங்குள்ளது என, தேடி அலைகின்றனர்.
இலவச உணவு
இவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், 'ரோட்டி அறக்கட்டளை' சார்பில் இலவச உணவு வழங்க துவங்கினார். ஆரம்பத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், 250க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினார்.
இதுகுறித்து, பேஸ்புக் உட்பட மற்ற சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து கொண்டார். இதை கண்டு பலரும், தங்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற சிறப்பு நாட்களில், உதவிக்கரம் நீட்ட துவங்கினர். அதன்பின் தினமும் உணவு வழங்க ஆரம்பித்தார்.
இதுதொடர்பாக, சையத் குலாப் கூறியதாவது:
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உறவினர்கள், உணவு கிடைக்காமல் அவதிப்படுவதை நேரில் கண்டேன். இது எனக்கு வருத்தம் அளித்தது. இவர்களுக்கு உதவ விரும்பினேன். டிரஸ்ட் அமைத்து இலவச உணவு வழங்க துவங்கினேன்.
முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில், உணவு வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அஜர் மக்யூசி என்பவர், என்னை தொடர்பு கொண்டு வாரம் ஒருமுறைக்கு பதிலாக, தினமும் உணவு வழங்குங்கள். தேவையான உதவிகளை செய்வதாக ஊக்கப்படுத்தினார். எங்களுடன் கைகோர்த்தார். அன்று முதல் இதுவரை, எங்களின் சேவையை தொடர்கிறோம்.
தினமும்
ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி மருத்துவமனைகள், நிமான்ஸ் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு தினமும் மதியம் 12:00 மணிக்கு உணவு வழங்குகிறோம். அவர்கள் வரிசையில் நின்று உணவு வாங்கிச் செல்கின்றனர்.
பசிக்கு எந்த ஜாதி, மதமும் இல்லை. பசியோடு வருவோருக்கு பாரபட்சம் பார்க்காமல், உணவு வழங்குகிறோம். வரும் நாட்களில் பெங்களூரின் அனைத்து மருத்துவமனை முன் உணவு வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம். டாக்டர்களின் ஆலோசனைப்படி, நோயாளிகளுக்கு தரமான, ஊட்டச்சத்தான உணவு வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்
.- நமது நிருபர் -