மெக்கன் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு வங்கி
மெக்கன் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு வங்கி
ADDED : ஆக 04, 2024 10:55 PM
ஷிவமொகா: ஷிவமொகாவின் மெக்கன் மருத்துவமனையில், 'அமிர்ததாரே' திட்டத்தின் கீழ், தாய்ப்பால் சேகரிப்பு வங்கி திறக்கப்பட்டு உள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு தாயின் தாய்ப்பால், அமிர்தம் போன்றது. ஆனால், சில தாய்மார்களுக்கு பல காரணங்களால் தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், ஷிவமொகாவின் மெக்கன் மருத்துவமனையில் 'அமிர்ததாரே' திட்டத்தின் கீழ், தாய்ப்பால் சேகரிப்பு வங்கி திறக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் திம்மப்பா கூறியதாவது:
எங்கள் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு மற்றும் வினியோகம் வங்கி துவங்கப்பட்டு உள்ளது. தாய்ப்பால் கொடுக்க விரும்பும் தாய்மார்களுக்கு பல சோதனைகள் செய்யப்படும்.
ஆய்வில், 'தாய்ப்பால் கொடுக்கலாம்' என்ற முடிவு வந்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து தாய்ப்பால் வாங்கப்படும்.
இங்கிருந்து தேவையான குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கப்படுகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. இது அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். தினமும் 56 - 60 குழந்தைகளுக்கு பால் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, 40 நாட்கள் பால் பெற்று வரும் ஷில்பா என்ற பெண் கூறுகையில், ''என் குழந்தை பிறந்தபோது 965 கிராம் எடை மட்டுமே இருந்தது.
''குழந்தை பிறந்தது முதல் எனக்கு தாய்ப்பால் வரவில்லை. இம்மையத்தில் இருந்து தினமும் பால் வாங்கி, என் குழந்தைக்கு கொடுத்து வருகிறேன். இப்போது என் குழந்தை 1.370 கிராம் எடை உள்ளது,'' என்றார்.