ADDED : மே 28, 2024 06:23 AM
கலபுரகி: அண்ணியுடன் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மைத்துனர் கொலை செய்யப்பட்டார்.
கலபுரகி ஆளந்தாவின் முன்னோள்ளி கிராமத்தில் வசித்தவர் ஹிராலால் லதாப், 35. இவர் சிறு, சிறு ஒப்பந்த பணிகளை செய்தார். இவரது அண்ணி, அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருடன், கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விஷயம் ஹிராலால் லதாபுக்கும், அவரது அண்ணன் பாபு லதாபுக்கும் தெரியவந்தது.
ரவியை, பாபு லதாப் கண்டித்தார். நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு, தகாத முறையில் நடக்க வேண்டாம் என, மனைவிக்கும் புத்திமதி கூறினார். இதை பொருட்படுத்தாத மனைவி, கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இதனால் மனம் வெறுத்த கணவர் பாபு லதாப், ஒன்றரை ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
அண்ணன் ஊரை விட்டு சென்றதால், வருத்தமடைந்த ஹிராலால் லதாப், ரவியையும், தன் அண்ணியையும் கண்டித்தார். ஆனால் இருவரும் திருந்தவில்லை.
நேற்று காலை, ஹிராலால் தன் நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவி, குடிபோதையில் இருந்த ஹிராலாலை, கல்லால் மனம் போனபடி தாக்கிவிட்டு தப்பியோடினார். காயமடைந்த இவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நரோனா போலீசார் விசாரிக்கின்றனர்.