மூன்று வயது ஆண் குழந்தை மீது கொடூர தாக்குதல்? பெற்றோர் மீது போலீசுக்கு சந்தேகம்
மூன்று வயது ஆண் குழந்தை மீது கொடூர தாக்குதல்? பெற்றோர் மீது போலீசுக்கு சந்தேகம்
ADDED : செப் 14, 2024 11:29 PM

உடுப்பி, : மூன்று வயது ஆண் குழந்தையை, பெற்றோரே கொடூரமாக தாக்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. சுயநினைவில்லாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உடுப்பி மாவட்டம், ஹெப்ரியின் சக்கரமக்கி ஷேடிமனே கிராமத்தில் பிரேரித், 3. குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், நேற்று முன் தினம் காலையில் பெற்றோர், உடுப்பி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த ஆண் குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். குழந்தையின் உடல் முழுதும் காயங்கள் இருந்தன.
முதலுதவி சிகிச்சை அளித்த பின், கே.எம்.சி., மருத்துவமனைக்கு மாற்றினர்.
அங்குள்ள டாக்டர்கள், குழந்தையின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதை பார்த்து, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து, விசாரித்தனர்.
இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். துறை அதிகாரிகள் நேற்று மருத்துவமனைக்கு வந்து, குழந்தையை பார்த்தனர். டாக்டர்களிடம் தகவல் பெற்றனர். அதன்பின் அமாவாசைபைலு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும் விசாரணையை துவக்கினர். குழந்தைக்கு எப்படி காயங்கள் ஏற்பட்டன என்பது குறித்து, தாய் பூர்ண பிரியாவிடம் விசாரித்தபோது, மழுப்பலாக பதிலளித்துள்ளார். பெற்றோரே, குழந்தையை தாக்கியிருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
குழந்தையின் உடலில் பலத்த காயங்கள் உள்ளன. மேல் நோட்டத்தில் பார்க்கும்போது, கடுமையாக தாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. குழந்தையை நாங்கள் பார்த்தோம். டாக்டர்களிடம் அறிக்கை பெற்றோம். தற்போது குழந்தைக்கு சுயநினைவு இல்லை. முழுமையாக குணமடைந்த பின், தகவல் தெரிந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாகரத்னா,
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி