கவர்னருக்கு 'புல்லட் புரூப்' கார் 'இசட்' பிரிவு பாதுகாப்பு; நிகழ்ச்சிகள் ரத்து கர்நாடக காங்., தலைவர்கள் மிரட்டல் எதிரொலி
கவர்னருக்கு 'புல்லட் புரூப்' கார் 'இசட்' பிரிவு பாதுகாப்பு; நிகழ்ச்சிகள் ரத்து கர்நாடக காங்., தலைவர்கள் மிரட்டல் எதிரொலி
ADDED : ஆக 22, 2024 12:55 AM

பெங்களூரு, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதி அளித்ததால், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, 'புல்லட் புரூப்' கார் மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
'மூடா' எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஆபிரகாம் உள்ளிட்ட மூவர் அளித்த புகாரின் அடிப்படையில், சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடந்த 17ம் தேதி அனுமதி அளித்தார்.
அன்று முதல் கவர்னரை கண்டித்து, காங்கிரசார் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மங்களூரில் நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி., ஐவான் டிசோசா பேசுகையில், 'வங்கதேச பிரதமருக்கு நேர்ந்த கதிதான், கவர்னருக்கும் ஏற்படும்' என்றார்.
கவர்னரை மிரட்டும் காங்., தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில டி.ஜி.பி.,யிடம் பா.ஜ.,வினர் புகார் அளித்தனர். இதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பும்; துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்காத, 'புல்லட் புரூப்' காரும் வழங்க பரிந்துரை செய்தது.
இதன்படி, மேற்கண்ட பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, வரும் 29ம் தேதி வரை கவர்னர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
கர்நாடக கவர்னராக பதவியேற்றபோதே, தாவர்சந்த் கெலாட்டுக்கு புல்லட் புரூப் கார் வழங்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த அவர், சாதாரண இன்னோவா காரை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.