தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு ஆணைய ஆவணங்கள் எரிப்பு; சித்தராமையா அரசுக்கு அடுத்த நெருக்கடி
தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு ஆணைய ஆவணங்கள் எரிப்பு; சித்தராமையா அரசுக்கு அடுத்த நெருக்கடி
ADDED : ஜூலை 23, 2024 11:33 PM
ஹாசன் : ஹாசன் தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு ஆணைய ஆவணங்கள் தீயில் எரிக்கப்பட்டதாக, கலெக்டரிடம் சத்தியபாமாவிடம், ம.ஜ.த., புகார் அளித்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகின்றன. அதற்குள் அரசு மீது தினமும் புதிது புதிதாக முறைகேடு புகார்கள் எழுந்து வருகின்றன.
வால்மீகி மேம்பாட்டு ஆணையம்; 'மூடா'வில் நடந்த முறைகேடு அரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.
சந்தேகம்
இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் பெயரில் இயங்கும், தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் வாயிலாக பிற்படுத்தப்பட்டோருக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆணையத்தின் தலைமை அலுவலகம், பெங்களூரு கங்கா நகரில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில் ஹாசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகா பைர கொண்டனஹள்ளி கிராம பஞ்சாயத்து ம.ஜ.த., கவுன்சிலர் உமேஷ் என்பவர், நேற்று காலையில், ஹாசன் கலெக்டர் சத்தியபாமாவை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
முறைகேடு?
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஹாசன் டவுனில் உள்ள தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகளை மூடி மறைக்கும் வகையில், ஏராளமான ஆவணங்கள் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு, அரிசிகெரே அருகே உள்ள, ஹப்பனகட்டா கிராமத்தின் காலி நிலத்தில் எரிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில், தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு ஆணைய அலுவலக ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு இருப்பதாக, ம.ஜ.த., புகார் அளித்திருப்பது அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியின் சொந்தத் தொகுதி. வரும் நாட்களில் தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு ஆணைய அலுவலக ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக, பா.ஜ.,வுடன் இணைந்து ம.ஜ.த.,வினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தும் வாய்ப்புள்ளது.

