தாக்குதல் எதிரொலி மஹா., - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து முடங்கியது
தாக்குதல் எதிரொலி மஹா., - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து முடங்கியது
ADDED : பிப் 24, 2025 12:06 AM

மும்பை,: மஹாராஷ்டிரா - கர்நாடகா அரசு போக்குவரத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தாக்கப்பட்டதை அடுத்து, இரு மாநிலங்கள் இடையிலான பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், மஹாராஷ்டிரா எல்லையில் உள்ளது. இங்கு மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
இங்குள்ள மாரிஹால் என்ற இடத்தில் கடந்த 21ம் தேதி, கர்நாடக அரசு பஸ்சில் தன் ஆண் நண்பருடன் ஏறிய 14 வயது சிறுமி, நடத்துநரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
அதற்கு நடத்துநர், தனக்கு மராத்தி தெரியாது என்றும், கன்னடத்தில் பேசும்படியும் கூறியுள்ளார். இந்த விவகாரம் வாக்குவாதம் ஆகி, நடத்துநரை சிலர் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இந்த தாக்குதல் தொடர்பாக நான்கு பேரை கைது செய்த போலீசார், நடத்துநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அதே நாள் இரவு, மஹாராஷ்டிர அரசு பஸ் ஒன்று, பெங்களூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, கர்நாடகாவின் சித்ரதுர்கா என்ற இடத்தில் அந்த பஸ்சை வழிமறித்த* சில கன்னட ஆதரவாளர்கள், பஸ் கண்ணாடிகளை உடைத்து, பஸ்சை சூறையாடினர்.
ஓட்டுநர் மீது கருப்பு பெயின்ட் ஊற்றியதுடன் அவரை சரமாரியாக தாக்கினர்.
இதை தொடர்ந்து, கர்நாடக அரசு சொகுசு பேருந்து ஒன்று மஹாராஷ்டிராவில் நேற்று சூறையாடப்பட்டது. இந்த சம்பவங்களால் இரு மாநிலங்களிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மஹாராஷ்டிரா செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைத்துள்ளதாக வடமேற்கு கர்நாடகா போக்குவரத்து கழக மூத்த அதிகாரி தெரிவித்தார்.
கர்நாடகா செல்லும் அரசு பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மஹாராஷ்டிர போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சார்நாயக் நேற்று தெரிவித்தார்.