ADDED : மார் 04, 2025 04:49 AM
கொடிகேஹள்ளி: கொடிகேஹள்ளி மேம்பாலம் அருகில் காருக்குள், தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு முத்தியால் நகரை சேர்ந்தவர் அஸ்வின் குமார், 42. இம்மாதம் 1ம் தேதி இரவு வீட்டில் இருந்து, தன் காரில் வெளியே சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டபோதும் எடுக்கவில்லை.
இதையடுத்து, போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதற்கிடையில், கொடிகேஹள்ளி மேம்பாலம் அருகில் நீண்ட நேரமாக ஒரு கார் நிற்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்தபோது, நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். போலீசார் பல முறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் கார் கண்ணாடியை உடைத்து, கதவை திறந்தனர். அவரை பரிசோதித்தபோது இறந்தது தெரிந்தது.
தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், அவரின் சாவில் மர்மம் உள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான வழக்காக பதிவு செய்து விசாரிக்கின்றனர்.