வாங்க... மனம் நிறைய சாப்பிடலாம்! ரூ.10க்கு எட்டு இட்லி, ஒரு போண்டா!
வாங்க... மனம் நிறைய சாப்பிடலாம்! ரூ.10க்கு எட்டு இட்லி, ஒரு போண்டா!
ADDED : மே 19, 2024 06:27 AM

இன்றைய பொருளாதாரத்தில் பத்து ரூபாய்க்கு ஒரு இட்லி கிடைக்கும் நிலையில், பத்து ரூபாய்க்கு எட்டு இட்லி, ஒரு போண்டா தருகிறார். 60 வயது பெண்.
பொதுவாக நாம் அனைவரும் ஒரு வகையான உணவு பிரியர்கள். பயணத்தின்போது, ருசியான ஒரு சிற்றுண்டி அல்லது உணவு கிடைத்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள்.
ஒரு ரூபாய் இட்லி
அதுவும் குறைந்த விலையில், வயிறு நிறைய உணவு கிடைத்தால் எப்படி இருக்கும். இப்படிப்பட்ட ஒரு இடம் தான், பெங்களூரு - மைசூரு சாலையில் மாண்டியா மாவட்டம், இந்துவாலு கிராமம் சாலையில் சிற்றுண்டி கடை. 'ஒரு ரூபாய் இட்லி கடை' என்று கேட்டாலே, கிராமத்தினர் கூறிவிடுவர். இந்த கடையை, நிங்கம்மா, 60, என்பவர் நடத்தி வருகிறார்.
இக்கிராமத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவரது கணவர் ஹோட்டல் நடத்தி வந்தார். அப்போது ஒரு இட்லியின் விலை 50 பைசா. கணவர் திடீரென இறந்ததால், அவரின் நினைவாக, அந்த ஹோட்டலை நிங்கம்மாவே நடத்தி வருகிறார்.
தனது ஒரே மகளை திருமணம் செய்து வைத்துவிட்டு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோரின் பசியைப் போக்கி வருகிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இட்லி விலையை ஒரு ரூபாய் என உயர்த்தினார். பத்து ரூபாய்க்கு, மல்லிகை பூ போன்று எட்டு இட்லி, ஒரு போண்டா, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வழங்குகிறார். இவற்றின் ருசி, நம் வாழ்நாளில் மறக்க முடியாது.
விஷயம் தெரியாதவர்கள், 100 ரூபாய் நீட்டினால், பத்து ரூபாய் என்று கூறி, பணம் கொடுத்தவருக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறார். குடிசையில் நடத்தப்பட்ட உணவகத்தை, இடித்து ஷெட் போன்று கட்டியுள்ளார். இங்கேயே அவரும் வசிக்கிறார்.
தினமும் அரிசி - உளுந்தை ஊற வைக்கிறார். இரண்டு அல்லது மூன்று பக்கெட்களில் எடுத்துக் கொண்டு, மாண்டியாவுக்கு பஸ்சில் செல்கிறார். அதை அரைத்து, மீண்டும் பஸ்சில் உணவகத்துக்கு கொண்டு வருகிறார்.
100 போண்டா
ஒரு நாளைக்கு 500 இட்லி, 100 போண்டா தயார் செய்கிறார். இவற்றை விற்பதன் மூலம், 700 ரூபாய் சம்பாதிக்கிறார். இதில், அரிசி, பருப்பு, கடலைப்பருப்பு, கடலை மாவு, வெங்காயம், எண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் செலவுகளை கழித்தால், தினமும் 150 - 200 ரூபாய் வரை கிடைக்கிறது.
'10 ரூபாய்க்கு எட்டு இட்லி தருகிறீர்களே. 150 ரூபாய் வருமானம் போதுமா?' என்று கேட்டால், 'இந்த வயதில் என்னை யார் கூலி வேலைக்கு கூப்பிடுவர். இந்த இட்லி மூலம் கிடைக்கும் வருமானமே போதும்' என்கிறார், புன்முறுவலுடன்.
- நமது நிருபர் -

