நேஹா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு பயாஸை அழைத்து சென்று விசாரணை
நேஹா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு பயாஸை அழைத்து சென்று விசாரணை
ADDED : ஏப் 25, 2024 03:59 AM

ஹூப்பள்ளி : ஹூப்பள்ளியில் கல்லுாரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு, பயாஸை அழைத்துச் சென்று, சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.
ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் மகள் நேஹா, 23. கடந்த 18ம் தேதி கல்லுாரி வளாகத்தில் வைத்து, நேஹாவை, பயாஸ், 23, என்பவர் கத்தியால் குத்திக் கொன்றார். வித்யாநகர் போலீசார் அவரை கைது செய்தனர். கொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்ததால், விசாரணையை சி.ஐ.டி.,யிடம் மாநில அரசு ஒப்படைத்தது.
சி.ஐ.டி., - எஸ்.பி., வெங்கடேஷ், டி.எஸ்.பி., மனோகர் தலைமையிலான குழு விசாரணை நடத்துகிறது. தார்வாட் சிறையில் அடைக்கப்பட்ட பயாஸை, சி.ஐ.டி., போலீசார் ஆறு நாள் காவலில் நேற்று வெளியே எடுத்தனர்.
கொலை நடந்த கல்லுாரிக்கு அழைத்துச் சென்று, பயாஸிடம் போலீசார் விசாரித்தனர். இன்னொரு குழு பயாஸின் சொந்த ஊரான பெலகாவி சவுந்தட்டி முனவள்ளி கிராமத்தில் விசாரணை நடத்தியது.
கல்லுாரியில் வைத்து பயாஸிடம் விசாரணை நடந்தபோது, கல்லுாரி முன் ஏ.வி.பி.வி., மாணவ அமைப்பினர் கூடினர். பயாஸிக்கு துாக்கு தண்டனை விதிக்கக் கோரியும், அவரை தங்களிடம் விடும்படியும் கோஷம் எழுப்பினர். இதனால் பயாஸை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கல்லுாரியில் இருந்து, ஜீப்பில் வெளியே அழைத்துச் சென்றனர்.
நேஹா தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால், அவரை கொலை செய்ய 13ம் தேதி பயாஸ், கத்தி வாங்கி உள்ளார். 18ம் தேதி கல்லுாரிக்கு வந்த அவர், நேஹாவை கொன்றுவிட்டு தப்பிச் செல்வதற்காக, பைக்கை லாக் செய்யாமல் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேஹாவை குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது, மாணவர்கள் கூடியதால் பிரதான நுழைவு வாயில் வழியாக தப்ப முயன்றார். ஆனாலும் அவரை மாணவர்கள் மடக்கி பிடித்தது தெரிய வந்துள்ளது.

