சி.ஏ.ஏ., போராட்டம் எதிரொலி அசாமில் 8 பேருக்கு குடியுரிமை
சி.ஏ.ஏ., போராட்டம் எதிரொலி அசாமில் 8 பேருக்கு குடியுரிமை
ADDED : ஆக 16, 2024 12:41 AM
குவஹாத்தி, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்த அசாமில், எட்டு பேருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
கடந்த 2019ல் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, இங்கு பெருமளவில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின், கடந்த மார்ச் மாதத்தில் அதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் அசாமின் சில்சாரைச் சேர்ந்த துலான் தாஸ், 50, உட்பட எட்டு பேருக்கு சமீபத்தில் இந்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்த சட்டத்தின்கீழ், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான, ஹிந்து, ஜெயின், கிறிஸ்துவர், சீக்கியர், பவுத்தம், பார்சி சமூகங்களைச் சேர்ந்த அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
வங்கதேசத்தில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அசாமுக்கு வந்த, துலான் தாஸ் உட்பட எட்டு பேர், குடியுரிமை கோரி சமீபத்தில் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

