ADDED : ஆக 17, 2024 11:04 PM
பெங்களூரு: முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்ததும், நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடக்கும் என்று, காலை 10:52 மணிக்கு அறிவிப்பு வெளியானது. அது ரத்து செய்யப்படுவதாக 11:41 மணிக்கு திடீரென அறிவிக்கப்பட்டது.
பின், ஏற்கனவே அறிவித்தப்படி அமைச்சரவை கூட்டம் நடக்கும் என்று மதியம் 1:58 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
மாலை 5:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் துவங்கியது. 6:45 மணிக்கு முடிந்தது. ஆரம்பத்தில் துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் சித்தராமையா தலைமையிலேயே கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின், சிவகுமார் பேசுகையில், “முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னருக்கு, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும், முதல்வருக்கு ஆதரவாக இருக்கும்,” என்றார்.
மத்திய அரசு பிரதிநிதி
சித்தராமையா பேசியதாவது:
ஜனநாயகத்தை காப்பதற்காக, நீதி, நேர்மைக்கு ஆதரவாக அமைச்சர்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் கட்சி, லட்சக்கணக்கான தொண்டர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி.
கவர்னரின் முடிவு, அரசியலமைப்புக்கு எதிரானது, கண்டிக்கிறோம் என்று கர்நாடக அமைச்சரவை தீர்மானித்துஉள்ளது.
கவர்னர் என்பவர், ஜனாதிபதியின் பிரதிநிதியாக பணியாற்ற வேண்டும். கர்நாடகாவில், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறார். கவர்னர் வாயிலாக, ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் செயல்பாடு, ஜனநாயகம், கூட்டாட்சி முறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் என்று அமைச்சரவை கருதுகிறது.
சட்டவிரோதம்
ஊழல் வழக்கில் எப்படி செயல்பட வேண்டும் என்று, 2021 செப்டம்பர் 3ம் தேதி, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும், மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட சுற்றறிக்கை அனுப்பியது. அதை கவர்னர் பின்பற்றாமல் முடிவு செய்திருப்பது, சட்டவிரோதம்.
கவர்னரின் சட்டவிரோத முடிவை கண்டித்து, நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் மீது விசாரணை முடிந்தும், நடவடிக்கை எடுக்க கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. என் மீது மட்டும் அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
கவர்னர் ராஜினாமா
ஆனால், என் மீது விசாரணை நடக்கவில்லை. என் அதிகாரத்தை பயன்படுத்தி, மனைவிக்கு மனைகள் ஒதுக்கும்படி, ஒரு சிபாரிசு கடிதமும் வழங்கவில்லை. என் ஆட்சிக் காலத்தில் மனைகள் ஒதுக்கவில்லை. எங்கும் என் கையெழுத்து இல்லை. பா.ஜ., ஆட்சியின்போது தான் ஒதுக்கப்பட்டன.
இப்படி இருக்கும்போது, நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? கவர்னர் தான் ராஜினாமா செய்ய வேண்டும். ஆதாரமின்றி கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
எங்கள் ஆட்சியை கவிழ்க்க பெரிய சூழ்ச்சி நடக்கிறது. இதைத் தடுக்க, நாங்களும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.

