அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது அமைச்சர் எம்.பி., பாட்டீல் திட்டவட்டம்
அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது அமைச்சர் எம்.பி., பாட்டீல் திட்டவட்டம்
ADDED : ஆக 01, 2024 12:40 AM

பெங்களூரு : ''அமைச்சரவை மாற்றுவது குறித்து, அரசு ஆலோசிக்கவில்லை. தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்,'' என கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர், துணை முதல்வர் டில்லி சென்றுள்ளதை தொடர்ந்து, அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவதாக வதந்தி பரப்புவது சரியல்ல. அங்கு என்ன ஆலோசனை நடந்தது என்பது குறித்து, எங்களுக்கு தெரியாது.
வதந்தி
'மூடா', வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு குறித்து, ஆலோசனை நடந்திருக்கலாம். அமைச்சரவை விஸ்தரிப்பு, மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடக்கவில்லை. யூகங்கள் அடிப்படையில் வதந்தி பரப்புகின்றனர்.
அமைச்சர் ஜமீர் அகமதுகான், ஏதோ உணர்ச்சி வசத்தால், 'நான் இன்னும் எத்தனை நாட்கள் அமைச்சராக இருப்பேனோ தெரியாது' என கூறியுள்ளார். அதே போன்று அமைச்சர் பதவியை பலரும் எதிர்பார்ப்பது சகஜம். மாநில அரசின் எந்த ஆணையமாக இருந்தாலும், அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும், நிர்வாக இயக்குனர்களே பொறுப்பாளி.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில், நாகேந்திராவுக்கு தொடர்பு இல்லை. அமைச்சர் எழுத்துபூர்வமாக கூறினாலும், அதை ஆணைய நிர்வாக இயக்குனர் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தனி நிர்வாகம் இருக்கும். அந்த நிர்வாகம் ஆலோசித்து முடிவு செய்யும்.
பா.ஜ., ஊழல்
எங்கள் அரசில் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு மட்டும் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடக்கிறது. பா.ஜ., அரசு காலத்தில் நடந்த ஊழல்கள், ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
கூடுதல் துணை முதல்வர் பதவியை உருவாக்குவது குறித்து, கட்சி மேலிடம் செய்யும். மூடா உட்பட, மற்ற விஷயங்களை முன் வைத்து, நடத்துவதாக அறிவித்துள்ள பாதயாத்திரையில் பா.ஜ., - ம.ஜ.த., இடையே ஒருங்கிணைப்பு இல்லை.
எங்கள் கட்சி சார்பில், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். வன விலங்குகள் ஆணையத்துக்கு, என் மகனை நியமித்ததில் தவறு எதுவும் இல்லை. அவர் யனெஸ்கோவில் வனவிலங்குகள் குறித்து, ஆய்வு செய்துள்ளார். வனவிலங்கு புகைப்பட கலைஞராக பணியாற்றியவர். 'டைம்ஸ்' உட்பட அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.