பா.ஜ.,வில் இருந்து அழைப்பு: 'பிகு' பண்ணும் ஈஸ்வரப்பா
பா.ஜ.,வில் இருந்து அழைப்பு: 'பிகு' பண்ணும் ஈஸ்வரப்பா
ADDED : ஜூலை 01, 2024 09:13 PM

ஷிவமொகா : “பா.ஜ.,வில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. இன்னும் என் முடிவை நான் தெரிவிக்கவில்லை,” என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு ஈஸ்வரப்பா சீட் கேட்டார். ஆனால் பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ., மேலிடம் சீட் கொடுத்தது.
கோபமடைந்த ஈஸ்வரப்பா, இதன் பின்னணியில் எடியூரப்பாவும், விஜயேந்திராவும் இருப்பதாக குற்றம் சாட்டினார். அத்துடன் ஷிவமொகா தொகுதியில் கட்சி வேட்பாளர் ராகவேந்திராவுக்கு எதிராக, சுயேச்சையாக ஈஸ்வரப்பா போட்டியிட்டார்.
கட்சி உத்தரவை மீறியதால், அவரை ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி, பா.ஜ., உத்தரவிட்டது. தேர்தலில் களமிறங்கிய அவருக்கு டிபாசிட்டும் கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்ப தயாராகிறார்.
இதுகுறித்து, ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வுக்கு திரும்பும்படி, எனக்கு அழைப்பு வந்துள்ளது. கட்சிக்கு செல்வது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, தேர்தல் வந்தால் மட்டும் கட்சிக்கு திரும்ப அழைத்துக் கொள்கின்றனர்.
ஆனால் இதுகுறித்து, உடனடியாக தீர்மானிக்க முடியாது. என் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளுடன் ஆலோசிக்க வேண்டும். பா.ஜ.,வுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் அளிப்பேன்.
கட்சியில் இருந்து என்னை வெளியேற்றியும், எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. செல்வாக்கு மங்கவில்லை.
ஷிவமொகா மாவட்ட கூட்டுறவு வங்கி தேர்தலில், என் ஆதரவாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். நகராட்சி தேர்தலின்போது, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து, தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.