ADDED : மே 28, 2024 06:05 AM
பெங்களூரு: மழை காலத்தில் சுரங்கப் பாதைகளில், தண்ணீர் தேங்கி அசம்பாவிதங்கள் தடுக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில், மழை பெய்யும் போது சாலைகளில் மட்டுமின்றி, சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி, வாகன பயணியர், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
கடந்தாண்டு கே.ஆர்.சதுக்கத்தில், மழை நீர் தேங்கி இருந்தது. இந்த வழியாக சென்ற கார், நீரில் மூழ்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு, மாநகராட்சியின் பொறுப்பின்மையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஆய்வு மையம்
நகரில் சில நாட்களாக, மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை விரைவில் துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழை அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் இடங்களை, அடையாளம் காண்கின்றனர். தண்ணீர் அதிகமாக தேங்கும் இடங்களில் 'சிவப்பு நிற டேப் ஒட்டப்படுகிறது.
தண்ணீரின் ஆழத்தை தெரிந்து கொள்ள, சிவப்பு நிற டேப் உதவும். இந்த டேப்கள் இல்லாத சுரங்கப்பாதைகளில் நுழையக்கூடாது என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மழை நீர் தடையின்றி பாய்ந்து செல்ல, சாக்கடைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழை அசம்பாவிதங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீர் கால்வாய்கள், சாக்கடைகளில் மண், குப்பையை அகற்றி, தண்ணீர் பாய்ந்து செல்ல, வழி வகுக்கப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். மழை பெய்யும் போது, வெள்ளத்தின் அளவை தெரிந்து கொள்ள, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். இதன் வழியாக மாநகராட்சி அதிகாரிகள், நீர் மட்டத்தை கவனிப்பர். நீர்மட்டம் அதிகமாக இருந்தால், உடனடியாக செயல்பட்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்து கொள்வர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.