முழு 'வீடியோ'வை காட்ட முடியுமா? கவர்னருக்கு மம்தா பானர்ஜி சவால்
முழு 'வீடியோ'வை காட்ட முடியுமா? கவர்னருக்கு மம்தா பானர்ஜி சவால்
ADDED : மே 12, 2024 02:01 AM

ஹூக்ளி /:“கவர்னர் மாளிகை கண்காணிப்பு கேமராவில் பதிவான முழு வீடியோவையும் பொதுமக்களுக்கு உங்களால் காட்ட முடியுமா?” என, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த் போசுக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துஉள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
கண்காணிப்பு கேமரா
இங்கு கவர்னராக உள்ள ஆனந்த போஸ் மீது, கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் தெரிவித்தார். கவர்னர் போஸ், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் மேற்கு வங்க போலீசார், அதற்கு ஒத்துழைக்கும்படியும், கண்காணிப்பு கேமரா காட்சிளை அளிக்கும்படியும் கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என கவர்னர் ஆனந்த போஸ், கவர்னர் மாளிகை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கவர்னர் மாளிகையில் குற்றம் நடந்ததாக கூறப்படும் தினத்தன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான சில மணி நேர காட்சிகளை பொதுமக்கள் 100 பேருக்கு கவர்னர் போஸ் சமீபத்தில் திரையிட்டார்.
இந்நிலையில், ஹூக்ளியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
பாலியல் விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான ஒரு சில காட்சிகளை மட்டுமே கவர்னர் பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் காண்பித்து உள்ளார். என்னிடம் முழுமையான பதிவு உள்ளது. அதேசமயம் கவர்னர் வெளியிட்ட நீக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய பதிவும் உள்ளது.
நீங்கள் யார்?
இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. அவரால் சம்பவத்தன்று பதிவான முழு வீடியோவையும் காண்பிக்க முடியுமா? கவர்னர் என்னை அழைத்தால் அவரது மாளிகைக்கு செல்ல மாட்டேன்.
வேண்டுமென்றால், சாலையில் அவர் என்னை சந்திக்கட்டும். நடந்த சம்பவங்களை கேள்விப்பட்ட பின், அவர் அருகில் அமர்வதே பாவம். நான் கேட்ப தெல்லாம் ஒன்றுதான். பெண்களுக்கு தொல்லை கொடுக்க நீங்கள் யார்?
இவ்வாறு அவர் பேசினார்.