உயர் பதவிக்கு நேரடி நியமனம் ரத்து; எதிர்ப்பால் முடிவை கைவிட்டது மத்திய அரசு
உயர் பதவிக்கு நேரடி நியமனம் ரத்து; எதிர்ப்பால் முடிவை கைவிட்டது மத்திய அரசு
ADDED : ஆக 20, 2024 01:43 PM

புதுடில்லி: மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசு துறைகளில், 45 இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த நிபுணர்களை நேரடி பணி நியமனம் செய்ய, மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது. இவ்வாறு செய்வதன் மூலம், இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக நீதி
'மத்திய அரசு உயர் பதவிகளில் நேரடி பணி நியமனம் சமூக நீதி மீதான தாக்குதல்' என முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து இருந்தார். தே.ஜ., கூட்டணியில் உள்ள சிராக் பஸ்வானும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் ஆட்சேபம் தெரிவித்தது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20), மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூகநீதி பாதிக்க கூடாது
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். வேலைவாய்ப்புகளில் சமூகநீதியை நிலை நாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

