தேர்தல் கமிஷன் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது : சுப்ரீம் கோர்ட்
தேர்தல் கமிஷன் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது : சுப்ரீம் கோர்ட்
ADDED : ஏப் 24, 2024 11:53 PM

புதுடில்லி: 'உச்ச நீதிமன்றம், தேர்தல்களை கட்டுப்படுத்தும் ஆணையம் அல்ல. அரசியலமைப்பு சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் உத்தரவிட முடியது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லோக்சபாவுக்கு தேர்தல் நடந்து வருகிறது. தற்போது ஒரு தொகுதியில், ஐந்து ஓட்டுச் சாவடிகளில், பதிவாகும் ஓட்டுகள், 'விவிபாட்' எனப்படும் ஓட்டு உறுதி சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
அனைத்து ஓட்டுச் சாவடிகளில் பதிவாகும் ஓட்டு உறுதி சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நேற்று காலையில் விசாரணைக்கு வந்தபோது, சில சந்தேகங்கள் இருப்பதால், தேர்தல் கமிஷனின் உயரதிகாரி ஒருவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமர்வு கூறியது. அதன்படி, தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் நிலேஷ் குமார் வியாஸ் நேரில் ஆஜராகி, அமர்வின் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதிலளித்தார்.
குறிப்பாக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், விவபாட் இயந்திரம் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை அமர்வு எழுப்பியது.
அமர்வின் கேள்விகளுக்கு நிலேஷ் குமார் வியாஸ் அளித்த விளக்கம்:
கட்டுப்பாடு பிரிவு, ஓட்டு இயந்திரம் மற்றும் விவிபாட் என, ஓட்டுப் பதிவு இயந்திரம் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவை தயாரிக்கப்படும்போதே, அவற்றில், 'மைக்ரோகன்ட்ரோலர்' என்ற, 'சிப்' பொருத்தப்படும். இவைதான், இந்த இயந்திரங்கள் செயல்படுவதற்கு முக்கியமானவை.
இந்த சிப்களில், எந்த நேரத்திலும், யாராலும் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, 'உச்ச நீதிமன்றம், தேர்தல்களை கட்டுப்படுத்தும் ஆணையம் அல்ல. அரசியலமைப்பு சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது' என, கூறிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

