வன துறையினருக்கு கேன்டீன் சமூக ஆர்வலர் வலியுறுத்தல்
வன துறையினருக்கு கேன்டீன் சமூக ஆர்வலர் வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2024 06:41 AM
பெங்களூரு: வனத்துறை ஊழியர்களுக்கு சலுகை கட்டணத்தில் பொருட்களை வழங்க, கேன்டீன் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
போலீசாருக்கும், ராணுவத்தினருக்கும் குறைந்த விலையில் தேவையான பொருட்கள் வழங்க கேன்டீன்கள் உள்ளன.
குறைந்தபட்ச வசதி
இதேபோன்று, வனப்பகுதியில் உயிரை பணயம் வைத்து, வன விலங்குகளுக்கு இடையே பணியாற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு கேன்டீன் வசதி செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.
இதுதொடர்பாக, வன விலங்கு ஆர்வலர் பிரிஜேஷ் குமார், வனத்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம்:
வனத்துறை ஊழியர்களுக்கு கேன்டீன் வசதி செய்ய வேண்டும்.
இதனால் குறைந்த வருவாய் கொண்ட ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும். அண்டை மாநிலமான தமிழகத்தில் இத்தகைய வசதி உள்ளது.
ஊழியர்களே வனத்துறையின் முதுகெலும்பு. வனத்தை பாதுகாப்பது, வன விலங்குகள், மனிதர்கள் இடையிலான மோதலை தடுப்பது, வேட்டைக்காரர்களை ஒடுக்குவது, வனப்பகுதி ஆக்கிரமிப்பை தடுப்பது போன்ற பணிகளை செய்கின்றனர்.
வனப்பகுதி எல்லை யில் குறைந்தபட்ச வசதிகளும் இல்லாமல் பணியாற்றுகின்றனர்.
கர்நாடகாவில் போலீஸ் துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கேன்டீன் மூலமாக, மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் சலுகை விலையில் வழங்குகின்றனர்.
இது போன்று வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கும், கேன்டீன் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சலுகை விலை
ஒருவேளை தனி வசதி செய்ய முடியாவிட்டால், போலீஸ் கேன்டீன் மூலமாகவே, வனத்துறையினருக்கும் சலுகை விலையில் பொருட்களை வழங்க வேண்டும்.
இது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும்.
இதுபோன்ற வசதிகள் இருந்தால், வனத்துறை ஊழியர்களின் மனோபலம் அதிகரிக்கும். பணிகளை மேலும் சிறப்பாக செய்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.