சிலிண்டர் வெடித்து காரில் தீ விபத்து; மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் பலி
சிலிண்டர் வெடித்து காரில் தீ விபத்து; மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் பலி
ADDED : டிச 09, 2024 04:39 PM

ஆமதாபாத்: குஜராத்தில் இரண்டு கார்கள் மோதி தீப்பற்றிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தின் மலியா ஹதினா கிராமத்திற்கு அருகே ஜுனாகத்-வெராவல் நெடுஞ்சாலையில் இன்று காலையில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.
விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த விபத்து சம்பவம் இன்று காலை 8 மணிக்கு நடந்திருக்கிறது. இரண்டு கார்களில், ஒரு காரில் இருந்த சி.என்.ஜி., சிலிண்டர்களில் ஒன்று வெடித்து, கார் தீப்பிடித்து அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியதால், பெரிய விபத்திற்கு காரணமாகிவிட்டது.
இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு கார்களும் முழு வேகத்தில் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு காரில் நான்கு பேரும், மற்றொரு காரில் ஐந்து பேரும் இருந்திக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், ஒரு கார் டிவைடருக்கு அருகில் வெட்டப்பட்ட சாலையைக் கடப்பதும், நெடுஞ்சாலையில் எதிர்புறத்தில் செல்வதும் தெரிகிறது. அப்போது மற்றொரு காரின் மீது மோதியதில் இரு கார்களும் கவிழ்ந்தன.
சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பயணிகள் அமர்ந்திருந்த போது வெடித்து சிதறியது. வாகனத்தின் தீ மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது.
பலியான ஏழு பேரில், ஐந்து பேர் தேர்வுக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள்.
உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையால், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ்களுடன் ஒரு போலீஸ் கான்வாய் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததால் சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
உயிரிழந்தவர்கள் வீனு தேவ்ஷி வாலா, நிகுல் விக்ரம் குவாடியா, ஓம் ரஜினிகாந்த் முக்ரா, ராஜு கஞ்சி கோன், தரம் விஜய் கோர், அக்சர் டேவ் மற்றும் ராஜு காஞ்சி பூட்டான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்துகிறோம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.