'கார்பைடு' மாம்பழங்கள் விற்பனை கண்டுகொள்ளாத தங்கவயல் அதிகாரிகள்
'கார்பைடு' மாம்பழங்கள் விற்பனை கண்டுகொள்ளாத தங்கவயல் அதிகாரிகள்
ADDED : மே 16, 2024 05:28 AM

தங்கவயல், : தங்கவயலில், 'கார்பைடு' ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
தங்கவயல் சந்தைகளில் மாம்பழங்கள் நிறைந்துள்ளன. 'கால்சியம் கார்பைடு' போன்ற ரசாயனங்கள் மூலம் மாங்காய்களை பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதன் காரணமாக, இவற்றை வாங்கி சாப்பிடுவோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த ரசாயனங்கள் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ள போதிலும், சந்தையில் மாம்பழங்களை பழுக்க வைக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கோலார் மாவட்டத்தில் தற்போது மாம்பழங்கள் அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால், மாம்பழம் சந்தைக்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே வந்து விட்டன. தொடக்கத்தில் சந்தையில் ஒரு கிலோ மாம்பழத்தின் விலை 160 முதல் 220 வரை விற்பனையானது. பின்னர் 50ல் இருந்து 80 ஆக குறைந்து வருகிறது.
கொழுத்த லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக மாம்பழங்கள் காய்க்கும் நிலையில் வலுக்கட்டாயமாக அறுவடை செய்யப்படுகின்றன. பின் கார்பைடு மூலம் பழுக்க வைக்கின்றனர்.
இது குறித்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுரேஷ் குமார் கூறுகையில், ''கார்பைடு கலந்த பழங்களை நேரடியாக சாப்பிடும் போது பல உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக தொண்டை அரிப்பு, தோல் அரிப்பு, ஒவ்வாமை போன்ற பல பிரச்னைகள் வரும். தொடர்ந்து சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அபாயம் உள்ளது,'' என்றார்.
கோலார் மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் கார்பைடு மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை சுகாதார அதிகாரிகளோ, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை.
தோட்டக்கலைத் துறை அதிகாரி சிவா ரெட்டி கூறுகையில், ''தோட்டக்கலை துறை விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட தீங்கு விளைவிக்காத ரசாயனங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட வைக்கோல், அல்லது வெப்பத்தில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களும் சந்தையில் கிடைக்கின்றன. தோட்டக்கலைத் துறை நடத்தும் மாம்பழ கண்காட்சி மூலம் நுகர்வோர் மாம்பழங்களை வாங்குவது நல்லது,'' என்றார்.