மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மீறல் பட்டியலில் கரோல் பாக் முதலிடம்
மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மீறல் பட்டியலில் கரோல் பாக் முதலிடம்
ADDED : மே 16, 2024 01:57 AM
புதுடில்லி:மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் பயணம் செய்யும் வாகனங்கள் எண்ணிக்கை கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ளது. அதிக வழக்குகள் பதிவில் கரோல் பாக் முதலிடத்தை பிடித்துள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு அவ்வப்போது அபாய கட்டத்தைத் தாண்டிச் செல்வது வாடிக்கை. இதைத் தவிர்க்க இந்த பிராந்தியத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அவசியம் என்பதும் ஒன்று.
வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வை குறைப்பதே இதன் நோக்கம்.
ஆனால் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் சாலைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 30 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
போலீஸ் துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் இல்லாமல் இந்த வாகனங்கள் சாலைக்கு வந்துள்ளன.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 78,169 வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில் இந்த ஆண்டு இது 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
நகரில் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல், விதிகளை மீறி பயணம் செய்ததாக அதிகபட்சமாக கரோல் பாகில் 4,034 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பஜன்புராவில் 3,852, அசோக் விஹாரில் 3,703, நஜப்கரில் 3,587, துவாரகாவில் 3,488, சரிதா விஹாரில் 3,420, நந்த் நாக்ரியில் 3,268, பஞ்சாபி பாக் பகுதியில் 3,265, மாடல் டவுனில் 3,126, திலக் நகரில் 2,794 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விதிமீறல்களை கட்டுப்படுத்த மேற்கண்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.