ADDED : ஜூன் 25, 2024 05:16 AM

பெங்களூரு : கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் குறித்து, நடிகை சஞ்சனா கல்ரானி, தயாரிப்பாளர் சிவபிரகாஷ் மீது பதிவான வழக்கை, கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
செலிபிரிட்டிகள், திரைப்பட நடிகர், நடிகையர், தொழிலதிபர்களின் பிள்ளைகள் போதைப்பொருள் பார்ட்டி நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், 2020 ஆகஸ்ட் 26ல் பெங்களூரின், கல்யாண் நகரில் உள்ள 'ராயல் சூட்ஸ்' ஹோட்டலில், போதைப்பொருள் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர்.
போதைப்பொருள் விற்ற அனுப், ரவீந்திரன், அங்கித் ஆகியோரை கைது செய்தனர். இவர்களை விசாரித்தபோது, நடிகர், நடிகையருக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தெரிந்தது. இதன் அடிப்படையில், நடிகைகள் சஞ்சனா கல்ரானி, ராகினி திரிவேதி, தயாரிப்பாளர் சிவ பிரகாஷ் சிப்பி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
சிறைக்கு சென்ற சஞ்சனா கல்ரானிக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டிசம்பரில் ஜாமின் கிடைத்தது. மற்றவர்களும் ஜாமின் பெற்றனர். தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, சஞ்சனா கல்ரானியும், சிவபிரகாஷ் சிப்பியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனு தொடர்பாக, விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்து, இருவர் மீதான வழக்கை ரத்து செய்து, நேற்று உத்தரவிட்டது.