அமித் ஷா குறித்த போலி வீடியோ காங்., நிர்வாகிகள் மீது வழக்கு
அமித் ஷா குறித்த போலி வீடியோ காங்., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : மே 01, 2024 01:00 AM

மும்பை, :மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பான, திருத்தப்பட்ட போலி வீடியோ வெளியிட்டதாக, மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரசின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி உட்பட, 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பிரசாரம் ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசினார்.
அப்போது, 'தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு சட்டவிரோதமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், இந்த இட ஒதுக்கீடு முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
'எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடம் இருந்து பறிக்கப்பட்ட, இட ஒதுக்கீடு அவர்களுக்கே வழங்கப்படும்' என்று அமித் ஷா பேசியுள்ளார்.
ஆனால், நாட்டில் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்வோம் என்று, அவர் கூறியுள்ளது போல், வீடியோவை திருத்தி, சமூக வலைதளங்களில் போலி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போலி வீடியோ வெளியிட்டது தொடர்பாக, டில்லி போலீசின் சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை விசாரணைக்கு அழைத்து உள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும், இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரசின், சமூக வலைதளங்களை கையாளும் நிர்வாகி உட்பட, 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாமில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பேசியதாவது:
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது முறையல்ல. அதை பா.ஜ., ஏற்கவில்லை. தாஜா அரசியல் நடத்தும் காங்கிரஸ், ஓட்டு வங்கிக்காக, இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆனால், மக்களை திசை திருப்பும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்றிவிடும் என, பொய்யை பரப்பி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.