காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு: பிரஹலாத் ஜோஷி எச்சரிக்கை
காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு: பிரஹலாத் ஜோஷி எச்சரிக்கை
ADDED : ஆக 27, 2024 06:35 AM

ஹூப்பள்ளி: ''இன்னொரு முறை ஆப்பரேஷன் தாமரையில் எனது பெயரை இழுத்தால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகா மீது அவதுாறு வழக்கு தொடருவேன்,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எச்சரித்துள்ளார்.
சீர்குலைக்க முயற்சி
'கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ., தலைவர்கள் 100 கோடி ரூபாய் பேரம் பேசுகின்றனர்.
'அரசை கவிழ்க்கும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, குமாரசாமி, ஷோபா, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்' என, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகா நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஹூப்பள்ளியில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை. ஆனால் 'ஆப்பரேஷன் தாமரை' மூலம், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை 100 கோடி ரூபாய் கொடுத்து, இழுக்க பார்ப்பதாகவும், அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும், எம்.எல்.ஏ., ரவி கனிகா கூறி உள்ளார்.
மாநில மக்கள் மத்தியில் என் மீதான நற்பெயரை சீர்குலைக்க முயற்சி செய்கிறார். இன்னொரு முறை 'ஆப்பரேஷன் தாமரை' விஷயத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசினால், அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன்.
புதிய முதல்வர்
'மூடா', வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அரசுக்கு எதிரான ஆவணங்கள் எங்களிடம் முதலில் இல்லை. ஆனால் எங்களுக்கு ஆவணங்களை கொடுத்தது காங்கிரஸ் தலைவர்கள் தான்.
இந்த ஆவணம் கொடுத்து யார் என, முதல்வர் சித்தராமையாவுக்கும் நன்கு தெரியும். அவர் வீட்டிற்குச் செல்லும் நாள் நெருங்கிவிட்டது. காங்கிரசில் புதிய முதல்வர் வருவார்.
கட்சி மேலிடம் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறும் சித்தராமையா, அடிக்கடி டில்லி செல்வது ஏன்? எங்கள் ஆட்சியில் ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் தர முடிவு செய்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் எதிர்த்தது. இப்போது அவர்களுக்கு நிலத்தை கொடுத்து உள்ளனர்.
கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தர்ஷன் வழக்கில் அரசு சரியாக செயல்படவில்லை என்பது தெரிந்துள்ளது. இது பற்றி கவர்னர், முதல்வருக்கு கடிதம் எழுதுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.