புதிய குற்றவியல் சட்டத்தில் மஹுவா மொய்த்ரா மீது வழக்கு
புதிய குற்றவியல் சட்டத்தில் மஹுவா மொய்த்ரா மீது வழக்கு
ADDED : ஜூலை 08, 2024 12:44 AM
புதுடில்லி: தேசிய மகளிர் கமிஷன் தலைவர் ரேகா சர்மா குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த விவகாரத்தில், திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா மீது, புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஹாத்ராசில், சமீபத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற, கடந்த 4ல், தேசிய மகளிர் கமிஷன் தலைவர் ரேகா சர்மா ஹாத்ரசுக்கு சென்றார். அப்போது, அவருக்கு பணியாளர் ஒருவர் குடை பிடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து, சமூக வலைதளத்தில் பலர் விமர்சனம் செய்தனர்.
இதற்கு பதிலளித்த திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., மஹுவா மொய்த்ரா, 'தன் முதலாளியின் பைஜாமாவை துாக்கிப் பிடிப்பதில், அவர் மிகவும் பிஸியாக இருந்திருப்பார்' என, பதிவிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பின், அந்த பதிவை அவர் நீக்கினார்.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதுாறு கருத்து தெரிவித்த மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, டில்லி போலீசில், தேசிய மகளிர் கமிஷன் தலைவர் ரேகா சர்மா புகார் அளித்தார்.
இதன்படி, புதிய குற்றவியல் சட்டமான, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு - 79ன் கீழ், மஹுவா மொய்த்ரா மீது, டில்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அவர் மீது நடவடிக்கை கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், ரேகா சர்மா கடிதம் எழுதி உள்ளார்.
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி.,யான மொய்த்ரா, கடந்த ஆண்டு டிசம்பரில், பார்லி.,யில் பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டில், எம்.பி.,யில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அவர் எம்.பி., ஆனார்.