ADDED : நவ 09, 2024 03:37 AM

சித்ரதுர்கா: உணவு கேட்டு அழுத, 6 வயது மகனை அடித்துக் கொலை செய்ததாக, தந்தை மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
சித்ரதுர்கா, பரமசாகர் அருகே ஹலே ரங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரம்மா, 32. இவரது கணவர் திப்பேஷ், 35. இந்த தம்பதியின் மகன் மஞ்சுநாத், 6.
கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை, வீட்டின் முன் மஞ்சுநாத் விளையாடிக் கொண்டிருந்தான்.
பின், தாயிடம் சென்று, 'வயிறு பசிக்கிறது. உணவு வேண்டும்' என்று கேட்டான். 'உணவு செய்ய தாமதமாகும்' என்று தாய் கூறினார். ஆனாலும் மஞ்சுநாத் அடம் பிடித்தான்.
இதனால் பக்கத்து வீட்டிற்கு, உணவு வாங்க கவுரம்மா சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மஞ்சுநாத் மயங்கிய நிலையில் கிடந்தான்.
அதிர்ச்சி அடைந்த தாய், மகனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். மஞ்சுநாத்தை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
உணவு கேட்டு அடம் பிடித்ததால், மகனை அடித்துக் கொன்றதாக, கணவர் திப்பேஷ் மீது கவுரம்மா போலீசில் புகார் செய்தார். தலைமறைவாக உள்ள திப்பேஷை போலீசார் தேடி வருகின்றனர்.