சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிப்பு காங்., சாம் பிட்ராடோ மீது வழக்கு
சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிப்பு காங்., சாம் பிட்ராடோ மீது வழக்கு
ADDED : மார் 10, 2025 11:14 PM

பெங்களூரு, : வனப்பகுதி நிலத்தை, 14 ஆண்டுகளுக்கும் மேலாக, சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ராடோ மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பா.ஜ., பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காங்., மூத்த தலைவர்களில் ஒருவர் சாம் பிட்ராடோ. காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக உள்ளார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு பா.ஜ., முன்னாள் தலைவரும், சமூக ஆர்வலருமான என்.ஆர்.ரமேஷ் என்பவர், சாம் பிட்ராடோ உட்பட சிலர் மீது பெங்களூரில் உள்ள, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது.
என்.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு விபரம்:
கடந்த 1991ல், சாம் பிட்ராடோ எப்.ஆர்.எல்.ஹெச்.டி., எனும் மூலிகை மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு மற்றும் விற்பனை அமைப்பை மும்பையில் பதிவு செய்தார்.
மும்பையில் பதிவு செய்த அமைப்புக்கு, பெங்களூரு, எலஹங்கா அருகில் உள்ள ஜரகபண்டேவில் உள்ள 12.35 ஏக்கர் வன பகுதியை, தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, 1996ல், ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தார். குத்தகை காலம் 2001ல் முடிந்தது.
குத்தகை காலம் முடிவடைந்த வனப்பகுதியை, 14 ஆண்டுகளுக்கு மேல் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறார். இது குறித்து கர்நாடக வனத்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.