ADDED : மார் 05, 2025 11:14 PM

கோலார்: கோலார் - சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருக்கும் பைலஹள்ளி கோவிந்தகவுடா, ராயலபாடு விவசாய சேவா கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் நாராயணசாமி, நிர்வாக அதிகாரி எம். வெங்கட முனியப்பா, சீனிவாசப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி கிளையின் மேலாளர் சீனிவாஸ் ஆகிய நான்கு பேர் மீது கோட்ட கத்த கிராம மகிளா சங்கத்தைச் சேர்ந்த பார்வதம்மா என்பவர், ராயலபாடு போலீசில் புகார் அளித்திருந்தார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
ஐந்து மகளிர் சுய உதவிக்குழு சங்கங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக 1.75 கோடி ரூபாயை சீனிவாசப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகை, சம்பந்தப்பட்ட மகளிர் குழு உறுப்பினர்களுக்கு கிடைக்கவில்லை.
மாறாக அந்தத் தொகையை நாராயணசாமி, முனிவெங்கடப்பா சீனிவாஸ், பைல ஹள்ளி கோவிந்த கவுடா ஆகியோர் போலி கையெழுத்துக்களை போட்டு, முறைகேடு செய்துள்ளனர்.
வங்கி கடனுதவி வழங்க உள்ள விதிகள், பணத்தை திரும்ப பெற உள்ள வழிமுறைகள், நபார்டு கடனுதவி திட்ட நோக்கம் ஆகியவற்றை 4 பேரும் மீறி உள்ளனர். அந்த தொகையை தங்கள் சேமிப்புக் கணக்கில் சேர்த்துள்ளனர்.
கடந்த 2022 டிசம்பர் 3ல் காசோலை எண் 464875ன்படி 50 லட்ச ரூபாய், டிசம்பர் 6ல் காசோலை எண் 464876ன்படி 1 கோடி ரூபாய், காசோலை எண் 464873ன்படி, 25 லட்ச ரூபாய் என மொத்தம் 1.75 கோடி ரூபாயை எடுத்துள்ளனர்.
மகளிர் குழுவினருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கடனுதவியும் அளிக்கவில்லை. ஆனால் பினாமி பெயரில் பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.
இவ்வாறு புகாரில் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து மேற்கண்ட நான்கு பேர் மீதும் ராயலபாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.