நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஆந்திராவில் வழக்கு பதிவு
நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஆந்திராவில் வழக்கு பதிவு
ADDED : மே 13, 2024 12:48 AM

அமராவதி : தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெறாமல், தன் நண்பரும், ஒய்.எஸ்.ஆர். காங்., - எம்.எல்.ஏ.,வும், வேட்பாளருமான சில்பா ரவி வீட்டுக்குச் சென்ற பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நந்தியால் சட்டசபை தொகுதியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., சில்பா ரவி மீண்டும் போட்டியிடுகிறார். இவர், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் நண்பர்.
தன் நண்பரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, சில்பா ரவி வீட்டுக்கு நேற்று முன்தினம் நடிகர் அல்லு அர்ஜுன் வந்தார். இதை அறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவரை காண்பதற்காக சில்பா ரவி வீட்டு முன் குவிந்தனர்.
அப்போது வீட்டின் பால்கனியில் இருந்து ரசிகர்களை பார்த்து, நடிகர் அல்லு அர்ஜுன், சில்பா ரவி உள்ளிட்டோர் கை அசைத்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக,நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும், அவரது நண்பரான ஒய்.எஸ்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ., சில்பா ரவி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.