மாமியாருக்கு கொலை மிரட்டல் சிறை கைதி மீது வழக்கு பதிவு
மாமியாருக்கு கொலை மிரட்டல் சிறை கைதி மீது வழக்கு பதிவு
ADDED : மே 07, 2024 06:21 AM
மைசூரு: மகளை தன்னுடன் அனுப்பவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக, கொலை வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் உள்ள மருமகன், மாமியாருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மைசூரு மாவட்டம், ராமனஹள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தேவம்மாவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமான சில மாதங்களில் கணவன் - மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் தனது தாயார் வீட்டில் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். இதற்கிடையில், கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக கிருஷ்ணா கைது செய்யப்பட்டு, மைசூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மைசூரு தெற்கு ரூரல் போலீஸ் நிலையத்தில், மாமியார் தேவம்மா புகார் அளித்துள்ளார்.
அதில், 'எனது மருமகன் கிருஷ்ணா, சிறையில் இருந்து என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'நான் மூன்று மாதங்களில் விடுதலையாகி விடுவேன். மரியாதையாக என் மனைவியை என்னுடன் அனுப்ப வேண்டும். இல்லை என்றால், நானாக எதையும் செய்யமாட்டேன். மற்றவர்கள் கையால் தான் செய்வேன்' என்று மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மைசூரு தெற்கு ரூரல் போலீசார், கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.