ரங்கநாதர் கோவிலில் பிரசாரம் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு
ரங்கநாதர் கோவிலில் பிரசாரம் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு
ADDED : மார் 31, 2024 11:08 PM

ஷிவமொகா: ஷிவமொகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தயாராகும், பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, இம்முறை லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கு எடியூரப்பா குடும்பத்தினரே காரணம். ஷிவமொகா தொகுதியில் ராகவேந்திராவை எதிர்த்து, நானே சுயேச்சையாக களமிறங்குவேன். என் வெற்றி உறுதி என, சூளுரைத்தார்.
பேச்சோடு நிற்காமல், சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்யவும், ஈஸ்வரப்பா தயாராகிறார். மடாதிபதிகளை சந்தித்து ஆதரவு கேட்கிறார். தொகுதியில் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
ஷிவமொகாவின் கோபால கிராமத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலுக்கு, நேற்று முன்தினம் சென்றார். அங்கு பிரசாரம் செய்தார். கோவிலில் பிரசாரம் செய்தது, தேர்தல் விதிமீறலாகும்.
எனவே இவர் மீது, துங்காநகர் போலீஸ் நிலையத்தில், தேர்தல் அதிகாரி நேற்று புகார் செய்தார். போலீசாரும், ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

